எதுவுமில்லாததில்
எல்லாம் இருக்கிறது
எல்லாம் இருப்பதில்
எதுவுமே இல்லை
இருப்பதையும் இல்லாததையும்
ஒன்றுபோலவே காட்ட
கண்ணும் மனமும் மட்டுமின்றி
உயிரும்கூட அதிசயமாய்
ஒரே குரல் தந்தபோதும்
பறந்தோடும் காலம் வந்து
கரகர சுருதியில் வேறுகுரல் தருவது
வேடிக்கை வாடிக்கை
இருப்பதில் இல்லாததையும்
இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்
உயிர்ப் பறவையின் சிறகசைப்பு
கடந்த நிகழ் எதிர் காலங்களின்
நேர்கோட்டில் ஒரு நொடி வாழ்ந்தாலும்
வாழ்வை ருசிக்கும் புலன்கள்
அர்த்தமற்றவையாகிப்போகும்
இருக்கின்றதென்ற எண்ணத் துடிப்பில்
இல்லாமல் இருப்பதை
தவிப்போடு தேடும் வாழ்க்கையில்
எல்லாமும் அந்த நொடிப் பூரணம்
இப்படியான
பல்லாயிரம் பல்லாயிரம் நொடிப் பூரணங்களின்
தொகுப்பே வாழ்க்கை
உடைந்தழிந்து உடைந்தழிந்து
கழிந்துபோனாலும்
நீரில் நீந்தும் நீர்க் குமிழ்கள்
வாழ்வில் நீந்தும் வாழ்க்கைத் துளிகளாய்
நிஜமானவைதான்
அன்புடன் புகாரி
Friday, August 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பாராட்டுக்கள்...
அன்புடன்
ராஜன்
Post a Comment