
மேப்பிள்மரக் காட்டுக்குள்ளே
மெய்சிலிர்க்கும் கூட்டுக்குள்ளே
பூப்பூவாய்ப் போட்டுக்கிட்ட
பொன்னழகு டெண்டுக்குள்ளே
ஆப்பிள் விதைச் சொகுசாக
அடுக்கு மல்லிச் சிரிப்பாக
தோப்புக் குயில் பாட்டாக
தொடர்ந்ததொரு கொண்டாட்டம்
ராப்பகலா ஆசைப்பட்டு
ரசனையோடு திட்டமிட்டு
ஆப்புவச்ச மழையக்கூட
அலட்சியமா ஒதுக்கிவிட்டு
மாப்பிள்ளையின் விருந்தாக
மரத்தடியின் பார்-பீ-க்யூ
சாப்பாட்டை வெட்டிக்கிட்டு
சந்தோசக் கொண்டாட்டம்
ஏரியோரக் குளியல்போட்டு
ஏரிக்குள்ளே படகுவிட்டு
வாரிவாரிக் குடிச்சாலும்
வத்தாத அழகையெலாம்
வாரம்பல தங்கினாலும்
வாராத சுகத்தையெலாம்
வாரயிறுதி ஒருநாளில்
வாரிக்கிட்ட கொண்டாடம்
பச்சைப்பசும் மரங்களோடு
பாட்டுப்பாடி கைகோத்து
உச்சிவெயில் வேளையிலும்
ஓடிவரும் தென்றலோடு
கொட்டுகின்ற அருவிதனில்
கும்மாளக் குளியல்போட்டு
மட்டற்ற மகிழ்ச்சியிலே
மத்தாப்புக் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டமென
கோடிகவி எழுதினாலும்
கொண்டாடிய உள்ளங்களின்
குதூகலத்தைச் சொல்லிவைக்க
உண்டான சொல்லென்று
ஓர்சொல்லும் கிடையாது
கொண்டாடித் திண்டாடிக்
கொண்டோமொரு கொண்டாட்டம்
அதிகாலை மூணரைக்கே
அவசரமாய்ப் புறப்பட்டோம்
மதி குளிரும் இளங்காலை
மலர் விரித்து வரவேற்க
ஒரில்லியா டிம்ஹார்டன்
ஒன்றினிலே ஒதுங்கினோம்
ஒருகுவளை 'டீ'பருகி
உடன்வந்தோம் கானிஸ்பே
கானிஸ்பே முகாமுக்குள்
காலெடுத்து வைத்தவுடன்
தேன்மதுவில் விழுந்ததுபோல்
தேகமெல்லாம் தித்திப்பு
மானினமும் மீனினமும்
மேப்பிள்இலைத் தோரணமும்
தோணியோட்டும் ஏரியோடு
தெவிட்டாத சுகங்களிங்கே
அல்கான்கொய்ன்..என்கின்ற
அழகுபெருந் தோட்டமதில்
இல்லாத சுகங்கள்பல
இறைந்தெங்கும தான்கிடக்க
மெல்லயாம் ஊர்ந்தபோது
மேய்ந்துநின்ற மூஸ்கூட
சொல்லியதாய்ச் சிலிர்த்தோமே
சுகமாக சலாமலைக்கும்
மீண்டுவர மனமில்லாமல்
மிகுந்தசுகம் தந்தபயணம்
மீண்டுவந்த போதுநெஞ்சில்
மெத்தையிட்டுக் கொண்டதடா
வேண்டும்பல இதுபோலென
வேண்டிநிற்கும் போதினிலே
வேண்டிவந்த யாவருக்கும்
நன்றிகூறி நிற்கிறேன்
நாலுமாதம் முன்பொருநாள்
நான்நீயென முந்திக்கொண்டு
ஏழுயெட்டு குடும்பமாக
எல்லோரும் பேர்கொடுத்து
நாளும்மெல்ல நெருங்கவர
நழுவினரே பலருமதில்
தோள்கொடுத்துத் தூக்கிநின்ற
தோழரவர் ரஃபிக்கு நன்றி
ஆறேழு வருடங்களாய்
அங்குமிங்கும் என்றுபல
ஊரெல்லாம் முகாமிட்டு
உறுதிபெற்ற கலிபுல்லா
தேர்போன்ற வாகனத்தில்
துணையாக வந்ததனால்
சீர்பெற்ற செய்திகளைச்
சொல்லித்தான் மாளுமோ
சாலைகளில் மட்டுமன்றி
சமையலிலும் முதல்வராக
மாலைமழை வேளையிலும்
மின்னல்இடி போதினிலும்
வேலையென்று எண்ணாமல்
விருந்தளித்த வெற்றிமகன்
வாழைபோன்ற தாய்மனமே
வாழ்கவே வாழ்க நன்றி
சொல்லெல்லாம் சிரிப்பாக
சோர்ந்தமன மருந்தாக
சொல்லவொரு அண்ணியாக
சுத்தத்தின் தேடலாக
அள்ளியள்ளி ஓயாமல்
அழுக்ககற்றிக் கேம்பினையே
முல்லையாய் வைத்திருந்த
ரஹ்மத்து அண்ணி நன்றி
கேட்டதென்னவோ இவரிடம்
ஆட்டுக்கறி வறுவல்தான்
கேட்காத பலவும் செய்து
காட்டிவிட்டார் இவர்மனதை
கூட்டத்தை வேருடனே
கொள்ளைகொண்ட சேவை
மீட்டாத வீணைபோன்ற
மென்மை ரம்சான் நன்றி
என்மனமோ உயரத்தில்
என்னுயிரோ பரவசத்தில்
இன்னுமின்னும் இதுபோன்ற
இனிப்பான அனைவருக்கும்
என்னுடைய நன்றிகளை
இனிதாகச் சொல்லுகிறேன்
என்னுடனே முகாம் வந்த
எல்லோர்க்கும் நன்றிநன்றி
அன்புடன்...புகாரி
2 comments:
மிக மிக நீண்ட நாட்களுக்கப்புறம் இந்த(இணையத்தின்)பக்கம் வந்தேன்!
புகாரியின் வலைப்பூவா..!!
வாழ்த்துகள் கவிஞரே :)
அனைத்தும் அழகிய கவிதைகள்
Post a Comment