Friday, August 31, 2007

கோபம் கொள்ளுதல் வேண்டும்


கோபம்
இறைவன் கொடுத்த வரம்

கோபப்படுதல் வேண்டும்
இல்லாவிட்டால்
கற்சிலைக்கும் மனிதருக்கும்
வித்தியாசமில்லை

கோபம் கொள்பவனைவிட
கோபப்பட வைப்பவனே
குற்றம் செய்கிறான்

கோபப்படுவதென்பது
தனக்குப் பிடிக்காதவற்றை
அழுத்தமாய்ச் சொல்வது

ஏன் கோபப்படுகிறாய் என்று
கேட்பதைவிட
ஏன் கோபப்படவைத்தோம் என்று
தன்னையே கேட்டுக்கொள்வது
நியாயம்

கோபம் இல்லா இதயத்தில்
நியாயம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா கண்களில்
கருணை இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா எதிர்பார்ப்பில்
அன்பிருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா உடலில்
வீரம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா குணத்தில்
கற்பிருக்க வாய்ப்பில்லை

கோபத்தை வெளிக்காட்டுவதில்
அளவற்ற நாகரிகம் வேண்டும்
ஆனால்
கோபமற்ற பிணமாய்
ஒருநாளும் ஆகிவிடக்கூடாது

கோபம் வந்தவன்தான்
நேர்மையை நிரூபிக்கிறான்
கோபம் வந்தவன்தான்
போட்டியில் வெல்கிறான்
கோபம் வந்தவன்தான்
சுயமரியாதை உயர்த்துகிறான்
கோபம் வந்தவன்தான்
சுதந்திரக்கொடி ஏற்றுகிறான்

இரத்தம் கொதித்தால்தான்
வக்கிரங்கள் வெந்துமடியும்
அறிவு கொதித்தால்தான்
ஆராய்ச்சிகள் வெற்றிபெறும்
அன்பு கொதித்தால்தான்
உறவுகள் வலுப்படும்
உயிர் கொதித்தால்தான்
வாழ்க்கை உண்மையாகும்


அன்புடன் புகாரி

No comments: