Friday, August 31, 2007

கோடுகள்


கோடுகள்
வாழ்க்கையில் ஏராளம்
அந்தக் கோட்டுக்குள்
நாடகம் அன்றாடம்

தாவிடும்
ஆசைகள் கூத்தாடும்
இன்பத் தவிப்புக்குள்
சிக்கியே நாளோடும்

மூடிய
மாங்கனி வீடாகும்
உள்ளே முத்தாக
வாழ்வது வண்டாகும்

கூடுகள்
இன்பத்தின் ஆதாரம்
அந்தக் கூட்டுக்குள்
அன்புதான் தேனூட்டும்

கட்டிய
காலுடன் நாட்டியம்
கண்கள் கட்டித்தான்
காட்சிகள் அரங்கேற்றம்

ஒட்டிய
தேவைகள் போராட்டம்
உயிரின் ஓலந்தான்
ஞானமாய் வேரோட்டும்

வெட்டிய
கீறலாய் ஏமாற்றம்
தொடரும் வெற்றெதிர்
பார்ப்போ ரணமாக்கும்

தொட்டது
தோற்பது சிறையாகும்
தொட்டுத் திறவாமல்
வெற்றியும் திசைமாறும்

இருட்டினில்
கண்களும் கூராகும்
துயரம் இடைமுட்ட
வாழ்வோ சீராகும்

கருத்தினில்
இழையா கனவுலகம்
வெற்று காற்றோடு
கரைந்து மணலாகும்

பருந்திடம்
மாட்டிய குஞ்சாக
நாளும் போராடித்
தவிக்கும் நன்னெஞ்சம்

விருந்தென
மடிவது படுமோசம்
வாழ்க்கை வெற்றிக்கு
மந்திரம் மனவீரம்

அன்புடன் புகாரி

No comments: